
கோலாலம்பூர், ஏப்ரல்-14, அமெரிக்க வர்த்தகக் கொள்கைகள் உலகச் சந்தையில் மாற்றங்களைத் தூண்டுவதால், தங்கத்தின் நடப்பு விலையான 500 ரிங்கிட் மேலும் 15% உயரக்கூடும்.
மலேசிய தங்க சங்கம் அவ்வாறு எச்சரித்துள்ளது.
உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி என்ற பெயரில் அமெரிக்கா கூடுதல் வரி விதித்த கையோடு தங்க விலையில் ஏற்ற இறக்கம் தொடங்கியதாக, அச்சங்கத்தின் துணைத் தலைவர் அப்துல் ரசூல் அப்துல் ரசாக் கூறினார்.
ஏப்ரல் 1-ஆம் தேதி ஒரு கிராமுக்கு 445 ரிங்கிட்டில் தொடங்கி, சிறிது நேரம் 430-ஆகக் குறைந்து, பின்னர் 459 ரிங்கிட்டாக உயர்ந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
கூடுதல் வரி அமுலுக்கு வந்த முதல் வாரத்தில், தங்கக் கட்டிகளின் விற்பனை 5 விழுக்காடு அதிகரித்தது.
ஆனால் உண்மையைச் சொல்வதென்றால், அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்தே தங்கத்தின் விலை உயரத் தொடங்கி விட்டது.
தங்கத்தின் விலை படிப்படியாக உயர வேண்டுமே தவிர, இப்படி ஒரேடியாக எகிறக் கூடாது.
அது ஆபத்தானது என்றார் அவர்.
அமெரிக்க டாலர் மதிப்பு பலவீனமடைதல் மற்றும் அதிகரித்து வரும் அமெரிக்க-சீன வர்த்தக பதட்டங்கள் காரணமாக, தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 14,400 ரிங்கிட்டைத் தாண்டியதாக, வெள்ளிக்கிழமையன்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
ஏப்ரல் 12 ஆம் தேதி நிலவரப்படி, மலேசியாவில் தங்கத்தின் விலை கிராமுக்கு 500 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க நலன்களை முன்னுரிமைப்படுத்தும் கொள்கைகளை ஆசிய பொருளாதாரங்கள் எதிர்க்க வேண்டும் என அப்துல் ரசுல் வலியுறுத்தினார்.
“பல நாடுகளைப் போலவே, நாமும் அமெரிக்க டாலரை சார்ந்துள்ளோம்; , ஆனால் அவர்கள் நம்மைப் பாதிக்கும் மற்றும் வளர்ச்சிக்கு உதவாத இந்தக் கொள்கைகளைத் திணிக்கின்றனர்; அவற்றை நாம் தொடர்ந்து பின்பற்ற முடியாது” என்றார் அவர்.
வர்த்தகப் போர் ஏற்படும்போது அமெரிக்க டாலர் குறையும், தங்கத்தின் விலை உயரும் என்பது உங்களுக்குத் தெரியுமென ரசூல் கூறினார்.