
கோலாலாம்பூர், செப்டம்பர்-4- சமையல் எண்ணெய் பேக்கெட்டுகளை வாங்க பயனீட்டாளர்கள் விரைவிலேயே QR குறியீடுகளை ஸ்கேன் செய்ய வேண்டி வரலாம்.
அதற்கான ஒரு செயலியை அரசாங்கம் உருவாக்கி வருவதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணையமைச்சர் Datuk Dr Fuziah Salleh கூறுகிறார்.
eCOSS எனப்படும் சமையல் எண்ணெய் விலை நிலைப்படுத்தல் திட்ட அமைப்புக்கான அச்செயலி, பயனீட்டாளர்கள் தங்கள் குடியுரிமை சரிபார்க்கப்பட்ட பின்னரே பொருட்களை வாங்க அனுமதிக்கும் என்றார் அவர்.
“சமையல் எண்ணெய், சீனி, பெட்ரோல் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை வெளிநாட்டினர் வாங்கக்கூடும் என்ற கவலைகளை அரசாங்கம் நன்கறியும்; இதுவரை, சீனி விநியோகம் போதுமான அளவில் உள்ளது, அது உண்மையில் ஒரு பிரச்னையாக இல்லை”
ஆனால், மலேசியர்களுக்கு சமையல் எண்ணெய் ஒரு பிரச்னையாக மாறியுள்ளது; காரணம் வெளிநாட்டினரும் அதை வாங்கி விடுகின்றனர் என, மேலவையில் 13-வது மலேசியத் திட்டம் குறித்த விவாதத்தை KPDN அமைச்சு சார்பில் நிறைவு செய்து பேசிய போது Fuziah அவ்வாறு சொன்னார்.
eCOSS செயலி மொத்த விற்பனையாளர்கள் முதல் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயனீட்டாளர்கள் வரை முழு விநியோகச் சங்கிலியையும் உள்ளடக்கும் என அவர் சொன்னார்.
மானிய விலையில் பொருட்களை வெளிநாட்டினர் வாங்குவதைத் தடுக்கும் இம்முயற்சி RON95 பெட்ரோலுக்கும் பொருந்தும் என்றார் அவர்.