கோலாலம்பூர், செப்டம்பர்-2 – ஒவ்வோர் அரசுத் துறையிலும் Jakim எனப்படும் இஸ்லாமிய மேம்பாட்டு துறை அதிகாரிகளை நியமிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது குறித்து, பல்மத அமைப்பு கவலைத் தெரிவித்துள்ளது.
அரசாங்கத் துறைகளின் முடிவுகள் இஸ்லாமியக் கோட்பாடுகளுடன் ஒத்துப் போவதை உறுதிச் செய்வதற்காக, அவ்வாறு திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஆனால், முடிவெடிக்கும் அதிகாரத்திலுள்ள அரசாங்கத்தில் Jakim-மின் ஈடுபாடு கூட்டரசு அரசியலமைப்புக்கு எதிரானதாக அமையலாமென, மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, மற்றும் தாவோ மதங்களின் ஆலோசக மன்றம் (MCCBCHST) ஐயம் தெரிவித்தது.
அனைத்து மலேசியர்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை அது பாதிக்கலாம் என அம்மன்றம் விளக்கியது.
Jakim அதிகாரிகள் அனைத்து அரசுத் துறைகளிலும் நியமிக்கப்படவிருப்பதாக, சபா லிபரல் ஜனநாயகக் கட்சியின் உதவித் தலைவரை மேற்கோள்காட்டி, ஆகஸ்ட் 13-ம் தேதி The Daily Express நாளிதழில் வெளியான செய்தி குறித்து கருத்துரைக்கும் வகையில், அம்மன்றம் அவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.