Latestமலேசியா

அரசு நிறுவனத்தின் குடும்ப தின விழாவில் பெரிய நச்சுணவுப் பாதிப்பு; 322 பேருக்கு உடல் உபாதை

ஷா ஆலாம், நவம்பர்-8 – அரசாங்க நிறுவனமொன்று சிலாங்கூரில் உள்ள புகழ்பெற்ற ஒரு கேளிக்கைப் பூங்காவில் நடத்திய குடும்ப தின விழா, நச்சுணவு சம்பவத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அக்டோபர் 4-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில் மொத்தமாக 322 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் 92 விழுக்காட்டினர் பெரியவர்கள்; மற்றவர்கள் பதின்ம வயதினர் மற்றும் சிறார்கள் ஆவர்.

இந்நிலையில் அக்டோபர் 6-ஆம் தேதி தகவல் கிடைத்ததும் உடனடி விசாரணையில், தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்ததாக, மாநில சுகாதாரத் துறை கூறியது.

உணவுண்ட 4,710 பங்கேற்பாளர்களில் அந்த 322 பேருக்கு கடும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் காணப்பட்டன.

அவர்கள் அனைவருக்கும் உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன; ஆனால் எவரும் வார்ட்டில் தங்க வைக்கப்படவில்லை.

தீவிர சிகிச்சைப் பிரிவிலும் யாரும் அனுதிக்கப்படவில்லை என்பதோடு உயிர் சேதமும் பதிவுச் செய்யப்படவில்லை என அத்துறை உறுதிப்படுத்தியது.

அந்த நச்சுணவுப் பாதிப்புக்கு, உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சமையல் உபகரணங்கள் மாசடைந்ததே காரணம் என்பது, தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

அதோடு, குறைந்த எண்ணிக்கையிலான கையாளுபவர்களால் பெரிய அளவில் உணவு தயாரிக்கப்பட்டது, பரிமாறுவதற்கு முன்பு உணவு நீண்ட நேரம் கிடப்பில் வைக்கப்பட்டது உள்ளிட்டவையும் அதற்கு காரணங்களாக இருந்துள்ளன.

இதையடுத்து கேளிக்கைப் பூங்காவின் சமையலறை தூய்மைப் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டு, உணவுப் பாதுகாப்பு பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!