ஷா அலாம், ஜன 3 – மலேசியா இதுவரை அரிசி விநியோக நெருக்கடி எதனையும் சந்திக்கவில்லை என்பதோடு இந்நாட்டு மக்களின் தேவைகளுக்கு போதுமானதாக அரிசி விநியோகம் இருப்பதாக பெர்னாஸ் (Bernas) எனப்படும் PadiBeras Nasional Berhad
தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி நாட்டின் தேவைக்கு எப்போதும் போதுமானதாக இருக்கிறது. எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து அரிசி விநியோகம் கிடைப்பதை பெர்னாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியை தீபகற்ப மலேசியாவில் உள்ள பெர்னாஸ் கிடங்கு வாயிலில் ஒரு மெட்ரிக் டன் 3,000 ரிங்கிட்டிலிருந்து 2,800 ரிங்கிட்டாக குறைத்து, 2024ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம்தேதி முதல் பெர்னாஸ் நடைமுறைப்படுத்தியுள்ளது.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம், இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் விலையை மலேசியாவில் ஒரு மெட்ரிக் டன் 3,200 ரிங்கிட்டிலிருந்து 3,000 ரிங்கிட்டாக பெர்னாஸ் குறைத்தது.
அந்த நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் விலை கடந்த 15 ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலையில் இருந்தது என பெர்னாஸ் சுட்டிக்காட்டியது.
அரிசி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக பெர்னாஸ், விவசாய, உணவு உத்தரவாத அமைச்சு மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு எப்போதும் தொடர்வதாக பெர்னாஸ் தலைவர் Datuk Syed Abu Hussin Hafiz தெரிவித்தார்.
இதனிடையே உள்நாட்டு சந்தையில் வெள்ளை அரிசி விநியோகம் மற்றும் அதன் விலை தொடர்பான நெருக்கடிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பாகிஸ்தானிலிருந்து வெள்ளை அரிசியை இறக்குமதி செய்யும்படி வாழ்க்கை செலவின மற்றும் உணவு நடவடிக்கை மன்றம் பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.