ஒருவழியாக அமுலுக்கு வந்த போர் நிறுத்தம்; நிம்மதியில் காசா திரும்பும் பாலஸ்தீன குடும்பங்கள்

காசா, ஜனவரி-20 – 2023 அக்டோபரில் வெடித்த போரால் இருப்பிடங்களை இழந்து நாடோடிகளாக வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள், காசா திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புகள் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அமுலுக்கு வந்ததே அதற்குக் காரணம்.
தங்கும் கூடாரங்கள், துணி மூட்டைகள் உட்பட தங்களுக்குச் சொந்தமான பல்வேறு பொருட்களை டிரக் வாகனங்களிலும் கழுதை வண்டிகளிலும் ஏற்றிக் கொண்டு, அவர்கள் ஊர் திரும்பினர்.
போரில் உருக்குலைந்து போயிருக்கும் காசா நகர வீதிகளில் குடும்பம் குடும்பமாக அவர்கள் நடந்துச் செல்லும் புகைப்படங்கள், பார்ப்போரின் மனதை இளகச் செய்கிறது.
ஹமாஸ் தரப்புடனான போர் நிறுத்தம் மலேசிய நேரப்படி நேற்று மாலை 5.15 மணியளவில் அமுலுக்கு வந்ததாக இஸ்ரேல் முன்னதாக அறிவித்தது.
பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஏற்கனவே அறிவித்ததை விட இது சுமார் 3 மணி நேரங்கள் தாமதமாகும்.
15 மாத கால போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும், இணக்கம் கண்ட படி பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவில்லை என்றால் காசாவில் மீண்டும் தாக்குதல் தொடருமென நெத்தன்யாஹு எச்சரித்துள்ளார்.