
அலோர் காஜா, மார்ச்-21 – மலாக்கா, அலோர் காஜாவில் கறுப்பு உடையில் பொம்மை துப்பாக்கியுடன் வந்த ஆடவன் கைச் சங்கிலிகளைக் கொள்ளையிட்டதில், நகைக்கடைக்காரருக்கு 250,000 ரிங்கிட் நட்டமேற்பட்டது.
பெக்கான் குவாலா சுங்காய் பாருவில் நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்ததாக, அலோர் காஜா போலீஸ் தலைவர் அஷாரி அபு சமா கூறினார்.
கைப்பேசியில் மும்முரமாக இருந்ததால் கொள்ளையன் கடைக்குள் நுழைந்ததைக் கடைக்காரர் பார்க்கவில்லை.
அவன் பொம்மை துப்பாக்கியை காட்டிய போதே அவர் உணர்ந்துள்ளார்.
உடனடியாக தனது 2 சிறு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு அலுவலகத்திற்குள் அவர் ஓடியிருக்கிறார்.
உள்ளே இருந்தவருக்கு, வெளியில் கண்ணாடி பெட்டிகள் நொறுங்கும் சத்தம் கேட்டது.
பிறகு வெளியில் வந்து பார்த்த போது, 2 தட்டுகளிலிருந்த 50-க்கும் மேற்பட்ட கைச் சங்கிலிகள் களவுபோயிருந்தன.
கொள்ளையன் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியதாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறினார்.
பின்னர் போலீஸ் வந்து பார்த்த போது நகைக்கடையின் தரையில் அந்த பொம்மை துப்பாக்கியைக் கண்டெடுத்தனர்.