
குவாந்தான், மார்ச்-8 – NFCC எனப்படும் நிதி மோசடி குற்றங்களுக்கான தேசியத் தடுப்பு மைய அதிகாரி மற்றும் போலீஸ் எனக் கூறிகொண்டு ஆள்மாறாட்டம் செய்த நபர்களால், குவாந்தானைச் சேர்ந்த ஓர் ஆசிரியை 226,400 ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.
கடந்தாண்டு நவம்பர் 15-ஆம் தேதி NFCC அதிகாரி எனக் கூறிக்கொண்ட நபரிடமிருந்து, 38 வயது அப்பெண்ணுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது.
தாம் பணச்சலவையில் ஈடுபட்டிருப்பதாக அந்நபர் குற்றம் சாட்டியதால் ஆசிரியை கதிகலங்கிப் போனார்.
கொஞ்ச நேரத்தில் தொலைப்பேசி அழைப்பு போலீஸ்காரர் எனக் கூறிக்கொண்டவரிடம் மாற்றப்பட்டது.
அவரோ, விசாரணை நடத்த ஏதுவாக பேங்க் நெகாராவுக்கு பணத்தை மாற்றுமாறு ஆசிரியையை உத்தரவிட்டார்.
இதையடுத்து, கொடுக்கப்பட்ட 3 வங்கிக் கணக்குகளுக்கு 21 தடவையாக 226,440 ரிங்கிட்டை அவர் மாற்றினார்.
அத்தனையும் அவரின் சேமிப்புப் பணமாகும்.
கடைசியில் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நேற்று அவர் போலீஸில் புகார் செய்தார்.