பத்து பஹாட், நவ 21 – Lotong cenekah எனப்படும் அழிந்துவரும் அரிய வகை குரங்குகள் பகாங்கிலுள்ள பல்வேறு காட்டுப் பகுதிகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மலேசிய துன் உசேய்ன் ஓன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழுவினர் இந்த குரங்குகளைக் கண்டுப்பிடித்தனர்.
இந்த முக்கியமான கண்டுபிடிப்பு இவ்வாண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் ஜர்னல் ஆஃப் ப்ரிமடாலஜி ( Ethnoprimatology ) சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வுக்கு துன் உசேய்ன் ஒன் மலேசிய பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் டாக்டர் முகமட் அப்துல் லத்திப் அபு பாக்கார் (Mohammad Abdul Latiff Abu Bakar ) தலைமையேற்றிருந்ததோடு PhD மாணவர்களுடன் சேர்ந்து, இனவியல் அணுகுமுறை மற்றும் DNA பகுப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தினார்.
இலைகளை உண்ணக்கூடிய இந்த வகை குரங்குகள் இதற்கு முன்பு ஜோகூர் வனப் பகுதிகளில் சுமார் 500 மட்டுமே இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்ததாக முகமட் தெரிவித்தார்.
இக்குரங்கு வகைகள் கூச்ச சுபாவத்தை கொண்டவையாக இருப்பதோடு இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியத்தின் சிவப்புப் பட்டியலின் கீழ் அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
வாழ்விடங்களான காட்டுப் பகுதி அழிக்கப்படுவது மற்றும் வேட்டையாடுதல் போன்ற பல்வேறு அச்சுறுத்தல் அபாயங்களை இந்த குரங்கு இனம் எதிர்நோக்கியுள்ளது.