அவதூறு பதிவுகளை மீட்டுக் கொள்ளுங்கள்; மருத்துவனையால் குழந்தை சடலத்தை பிடித்து வைத்த குழந்தையின் தந்தை எச்சரிக்கை
கோத்தா டாமான்சாரா, டிசம்பர்-13, ஆதாம் (Adham) என்ற தனது சிசுவின் சடலத்தை தனியார் மருத்துவமனை ‘பிடித்து வைத்துக்’ கொண்டதாக கூறி வைரலான தந்தை, அவ்விவகாரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் தன்னை அவதூறாக பேசிய, பேசி வரும் வலைத்தளவாசிகள், அவற்றை 3 மணி நேரங்களுக்குள் மீட்டுக் கொள்ள வேண்டும் என கெடு விதித்துள்ளார்.
இல்லையென்றால் வழக்கைச் சந்திக்க வேண்டி வருமென அவர் எச்சரித்தார்.
தனது கட்சிக்காரர் திருமணமே செய்யாதவர் என்பது உள்ளிட்ட பல்வேறு அவதூறுகளைப் பரப்பியுள்ள சமூக ஊடக கணக்குகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக, Safwan Roshdy எனும் அவ்வாடவரின் வழக்கறிஞர் Datuk Ahmad Zaharil Muhaiyar கூறினார்.
பெர்லிஸ் இஸ்லாமிய சமயத் துறையிடம் விசாரித்ததில், கட்சிக்காரர் திருமணம் செய்திருப்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
நீங்களாக கற்பனை செய்து கொண்டு அவதூறு பரப்பாதீர்கள்; உங்களுக்கு 3 மணி நேரம் மட்டுமே கால அவகாசம் உண்டு (நேற்று நள்ளிரவு) என Datuk Ahmad Zaharil சொன்னார்.
இவ்வேளையில், தனது கட்சிக்காரர் தொடர்பில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை வெளியிட்டு அறிக்கைக் குறித்து போலீசில் புகார் செய்யப்படுமென்றும் அவர் சொன்னார்.
தந்தையால் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் குழந்தையின் சடலத்தை ஒப்படைக்காமல் 16 நாட்களுக்கு மருத்துவமனையே வைத்துக் கொண்டது சட்டப்படி குற்றமாகும்.
என்றாலும் போலீஸ் மற்றும் சுகாதார அமைச்சின் விசாரணை அதில் முக்கியமென அந்த வழக்கறிஞர் சொன்னார்.
‘பாதிக்கப்பட்ட’ குடும்பமும் மருத்துவமனையும் பதிலறிக்கை விட்டிருப்பது சில நாட்களாகவே சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.