
கோலாலம்பூர், நவம்பர்-8 – முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கில் DAP தேசியத் தலைவர் லிம் குவான் எங் வெற்றிப் பெற்றுள்ளார்.
அல்புகாரி அறக்கட்டளைக்கான வரி விலக்கு நீக்கம் தொடர்பில் குவான் எங் மீது முஹிடின் அவதூறு பரப்பியது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, குவான் எங்கிற்கு முஹிடின் 1.35 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டுமென, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அவ்விவகாரத்தில் தமது புரிதல் சரிதானா என்பதை உறுதிச் செய்துகொள்வதற்கான அனைத்து வாய்ப்புகள் இருந்தும் அவ்வாறு செய்யாமல், சொந்த வியாக்கியானத்தின் அடிப்படையில் முஹிடின் வெளியிட்ட கருத்துகள் ஏற்புடையதல்ல.
அதுவும் தம் மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC-யின் விசாரணயை திசைத் திருப்பும் நோக்கில், குவான் எங் மீது முஹிடின் பழிபோடுவது முறையல்ல என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு தம் மீதான களங்கத்தைப் போக்கியிருப்பதாக முன்னாள் நிதியமைச்சருமான குவான் எங் தெரிவித்தார்.
முஹிடின் வெளியிட்ட கருத்து பொய்யானது, அடிப்படையற்றது என்பது நிரூபணமாகியிருப்பதால் தமக்கு நியாயம் கிடைத்துள்ளதாக அவர் சொன்னார்.