
கோலாலம்பூர், ஏப் 30 – கோழி முட்டைக்கான உதவித் தொகையை நாளை முதல் 10 சென்னில் இருந்து 5 சென் ஆகக் அரசாங்கம் குறைக்கிறது என்பதோடு , ஆகஸ்ட் 1 ஆம் தேதியுடன் மானிய உதவித் தொகை முழுமையாக முடிவுக்கு வருகிறது.
உற்பத்தி செலவுகள் நிலையாக இருப்பதால், போதுமான மற்றும் உத்தரவாதமான கோழி முட்டை உற்பத்தியை உறுதி செய்வதற்கான தொழில்துறையின் உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் முடிவுற்ற நோன்பு பெருநாள் காலத்தில் கோழி முட்டைகளுக்கான விநியோகம் போட்டா போட்டி விலையுடன் போதுமானதாக இருந்ததாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
A, B மற்றும் C தரங்களுக்கான ஒரு முட்டையின் விலை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 17 அம் தேதி 3 சென் குறைக்கப்பட்டு 42 சென், 40 சென் மற்றும் 38 சென்னாக நிர்ணயிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
கோவிட்-19 தொற்றைத் தொடர்ந்து உற்பத்திச் செலவுகள் அதிகரித்தது, உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர், சோயா மற்றும் சோளத்தின் இறக்குமதி விலைகளில் ஏற்பட்ட தாக்கம் போன்ற காரணத்தினால் , 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் கடந்த டிசம்பர் மாதம்வரை, கோழி முட்டை மானியங்களை தொழில்துறைக்கு வழங்குவதில் அரசாங்கம் கிட்டத்தட்ட 2.5 பில்லியன் ரிங்கிட்டை செலவிட்டுள்ளது.
விலை கட்டுப்பாடு மற்றும் மானியம் வழங்குவதற்கான காலம் நீண்ட காலத்திற்கு இருப்பது உள்ளூர் முட்டை உற்பத்தித் துறை வளர்ச்சிக்கும் , நாட்டின் நிதி நிலைமைக்கும் நிலையானது அல்ல என்பதையும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொண்டதாக அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது