
கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்-13 – SME எனப்படும் சிறு-நடுத்தர தொழில்துறைக்கான உதவித் திட்டத்திற்கு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தருவிக்கப்பட்டது தொடர்பில் 3.6 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் போலிக் கணக்குக் காட்டிய சந்தேகத்தில், சபாவில் 2 வர்த்தகர்கள் கைதாகியுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் சபா கிளையின் இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி அதனை உறுதிப்படுத்தினார்.
50 வயது மதிக்கத்தக்க அந்த ஆணும் பெண்ணும் கோத்தா கினாபாலு MACC தலைமையகத்திற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது கைதாகினர்.
இருவரும், 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் அக்குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
10,000 ரிங்கிட் ஜாமீன் தொகையில் முன்பணமான 1,000 ரிங்கிட்டை செலுத்தியதை அடுத்து இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
நாளை, கோத்தா கினாபாலுவில் ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் குற்றம் சாட்டப்படுவர் என கருணாநிதி சொன்னார்.
இவ்வேளையில், அதே போன்றதொரு புகார் தொடர்பில் சிலாங்கூரில் நிறுவனமொன்றின் இயக்குநர் கைதானார்.
பயணச் செலவு மற்றும் குளிரூட்டி வாங்கியது என்ற பெயரில் 33,000 ரிங்கிட்டுக்கு போலிக் கணக்குக் காட்டியதாக 50 வயது அமாது கைதானார்.
அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது.