ஈப்போ, ஜனவரி-21, பேராக், ஈப்போவில் 6 வயது மகன் காயமடையும் அளவுக்கு அவனை சித்ரவதை செய்ததாகக் கூறி, பாலர் பள்ளி ஆசிரியை மீது தாய் ஒருவர் புகார் செய்துள்ளார்.
ஜெலாப்பாங் அருகேயுள்ள பாலர் பள்ளியில் படித்து வந்த மகனின் உடலில் காயங்கள் இருப்பதை செப்டம்பரில் தாம் முதலில் கண்டறிந்ததாக, 42 வயது Aiza Salzul Hanira Zulkapli கூறினார்.
ஆசிரியை தன் இடுப்பில் கிள்ளியதாகவும், தினமும் தலையிலே அடிப்பதாகவும் கூறி மகன் பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளான்.
இதையடுத்து மகனின் உடலில் காணப்பட்ட காயத் தளும்புகளை ஆதாரமாக பதிவுச் செய்துகொண்டு, செப்டம்பர் 12-ஆம் தேதி பொது புகார் மேலாண்மை முறையில் அவர் புகார் செய்தார்.
பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட கல்வி இலாகாவிலும் புகார் செய்யப்பட்டது.
அதன் பிறகு மகன் துன்புறுத்தப்படுவது நின்றிருக்கும் என தாய் நம்பிய நிலையில், டிசம்பரிலும் அவன் பள்ளிச் செல்ல மாட்டேன் என அடம் பிடித்துள்ளான்.
தலையில் தொடர்ந்து அடித்தது தெரிய வந்ததால், டிசம்பர் 10-ஆம் தேதி போலீஸில் புகார் செய்ததாக, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் அம்மாது குறிப்பிட்டார்.
பிரம்பால் அடிக்கப்பட்டதில் மகனின் கையில் காயமும் வீக்கமும் ஏற்பட்டதாக, டிசம்பர் 14-ல் மேலுமொரு புகார் செய்யப்பபட்டது.
பள்ளி நிர்வாகத்தைக் கேட்டால், மகனுக்கு படிப்பில் பிரச்னை இருப்பதாகவும் வீட்டுப் பாடங்களை முடிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளியையே மாற்றி விட்ட போதிலும், மகன் இன்னமும் பள்ளிக்குச் செல்வதென்றாலே அலறுவதாக தாய் வருத்தத்துடன் கூறினார்.
ஆசிரியை அடித்தது அவனை மன அளவில் பாதித்துள்ளது; இதனால் மருத்துவமனையில் கூட அனுமதித்து விட்டோம்.
இது மற்ற பிள்ளைகளுக்கும் நடக்கக் கூடாது என்பதற்காகவே நடந்தவற்றை பகிர்வதாக, பேராக் மாநில கெராக்கான் கட்சி ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் Aiza கூறினார்.
அச்சம்பவம் போலீஸ் விசாரணையிலிருப்பதை ஈப்போ போலீஸ் உறுதிப்படுத்தியது.