சுபாங் ஜெயா, டிசம்பர்-18, சிலாங்கூர், பூச்சோங்கில் ஓர் ஆடவர் விரைந்து செயல்பட்டு, மோட்டார் சைக்கிளிலிருந்து சாவியைப் பிடுங்கியதால், வழிப்பறிக் கொள்ளையன் போலீசிடம் சிக்கினான்.
தாமான் பூச்சோங் இந்தான் அடுக்குமாடி குடியிருப்பின் சாலையோரத்தில் நேற்று முன்தினம் மதியம் 1 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
சந்தேக நபர் முன்னதாக அப்பகுதியில் பதின்ம வயது வெளிநாட்டுப் பெண்ணின் கழுத்திலிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றான்.
எனினும் அச்சமயத்தில் அங்கிருந்த ஓர் உள்ளூர் ஆடவர், அவனது மோட்டார் சைக்கிளிலிருந்து சாவியைப் பிடுங்கி போலீசிடம் அவனை ஒப்படைத்தார்.
கைதான நபரின் Honda Dash மோட்டார் சைக்கிளும் அவன் அபகறித்த 1,500 ரிங்கிட் மதிப்புள்ள தங்கச் சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலையில்லா 25 வயது அவ்வாடவன் விசாரணைக்காக வெள்ளிக்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா போலீஸ் கூறியது.