ஆடைக் கட்டுப்பாட்டில் தளர்வு வழங்குவதா? கிழக்கத்திய மதிப்பு எங்கே? பாஸ் துணைத் தலைவர் கண்டனம்

கோலாலம்பூர், டிசம்பர்-13, ஆபத்து அவசரங்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்திய அரசாங்கத்தின் முடிவை, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“கிழக்கு மதிப்புகள் மற்றும் ஒழுக்கம் காக்கப்பட வேண்டும்” என்றார் அவர்.
“ஆடை ஒழுக்கம் அரசியல் சார்ந்த விஷயம் அல்ல, சமூகக் கல்வியின் அடிப்படை. ருக்குன் நெகாரா தேசியக் கோட்பாடுகளின் மதிப்புகளையும், மரியாதையையும் காக்க ஆடைக் கட்டுப்பாடு அவசியம்” என அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, மலாக்கா ஜாசின் போலீஸ் நிலையத்தில் குட்டைப் பாவாடை அணிந்த பெண்ணுக்கு புகார் அளிக்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பாக DAP தலைவர்கள் உடை காரணமாக பொது மக்களுக்கான சேவை மறுக்கப்படக் கூடாது என வலியுறுத்தினர்.
ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் கூறினாலும், விமர்சனங்கள் அடங்கவில்லை.
இறுதியில், ஆபத்து அவசரங்களின் போது பொது மக்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளில் தளர்வு அறிவிக்கப்பட்டது.
அவ்வகையில் விபத்து, தீ, அல்லது பிற பேரிடர் சம்பந்தமான அவசர புகார்களை அளிக்க வரும் பொது மக்களை, அவர்கள் அணிந்துள்ள உடையைக் காரணம் காட்டி எந்த அரசுத் துறையும், போலீஸ் நிலையங்களும் தடுக்கக் கூடாது என, அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ Shamsul Azri Abu Bakar கூறினார்.
உடை காரணமாக எந்த அவசர உதவியும் மறுக்கப்படக்கூடாது என்பதில் அரசாங்கம் தெளிவாக உள்ளது என்றார் அவர்.



