ஆட்டிறைச்சியின் விலை அளவுக்கு அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து விளக்கம் அளிக்கும்படி உணவகத்திற்கு உத்தரவு

கோலாலம்பூரில் , ஜன 20 – 40 வயதுடைய உள்ளூர் பெண்ணுக்குச் சொந்தமான உணவகத்தில் ஆட்டிறைச்சியின் விலை அளவுக்கு அதிகமாக இருக்கும் தகவல் முகநூலில் வைரல்லானதை தொடர்ந்து உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழக்கை செலவின அமைச்சு நோட்டிஸ் வழங்கியிருக்கிறது.
நியாயமற்ற விலையில் உள்ள ஆட்டிறைச்சி கறி குறித்த வைரலான இடுகையைக் கவனித்த பின்னர், அமைச்சின் கெடா அலுவலகம் நேற்று காலை 11 மணியளவில் அந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமலாக்கக் குழுவை அனுப்பியது என்று பெர்னாமா தகவல் வெளியிட்டது.
அந்த உணவக உரிமையாளர் வாடிக்கையாளர்களுக்கு வைத்திருந்த விலைப் பட்டியலை கண்காணித்த பின்னர் , அந்த உணவகத்திற்கு விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாயத் தடைச் சட்டத்தின் கீழ் எழுத்துப்பூர்வ நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது.
ஆட்டிறைச்சி தொடர்பான செலவு மற்றும் சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சி விலை குறித்த தகவல்களை அக்கடையின் உரிமையாளர் ஆறு வேலை நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று அந்த நோட்டிசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.