
கோலாலம்பூர், மார்ச்-13 – நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளில் மகளிர் பிரிவுகள் அமைக்கப்படும் நடைமுறை அகற்றப்பட வேண்டுமென, வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான அம்பிகா ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
கட்சி நிர்வாகத்தில் அது ஆணாதிக்கக் கலாச்சாரத்தை மேலோங்கச் செய்வதாக அவர் சொன்னார்.
மகளிருக்கென தனி பிரிவை அமைப்பதன் மூலம், அதிகாரம் ஆண்கள் கையிலிருப்பதாக அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள்.
வெறும் குடும்பத்தையும் குழந்தைகள் பற்றியும் மகளிர் பேசிக் கொண்டிருக்கட்டும் என ஆண்கள் நினைக்கின்றனர் என, Mandiri எனும் அரசு சாரா இயக்கம் ஏற்பாடு செய்த பொது ஆய்வரங்கில் அம்பிகா பேசினார்.
இந்த அரசியல் கட்டமைப்பு பெண்களுக்கு சம உரிமையை வழங்குவதில்லை என்றார் அவர்.
இந்த விஷயத்தில் இளம் கட்சியான MUDA-வில் மகளிர் பிரிவு என்று ஒன்று இல்லாததைப் பாராட்டியாக வேண்டும் என அம்பிகா சொன்னார்.
இவ்வேளையில் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெண்கள் 15 விழுக்காட்டுக்கும் குறைவாக இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே தேர்தல் வேட்பாளர் தேர்வில் குறைந்தது 30 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
சமப்பங்காக நாங்கள் 50 விழுக்காட்டைக் கூட கேட்கவில்லை; 30-த்தான் கேட்கிறோம் என அம்பிகா மேலும் கூறினார்.