
கோலாலம்பூர், டிசம்பர்-2, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழுள்ள ஆலயங்கள் குத்தகைக்கு விடப்படலாம் அல்லது தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்படலாம் என வெளியாகியுள்ள தகவல் கவலையளிப்பதாக, பேராசிரியர் Dr பி.ராமசாமி கூறியுள்ளார்.
அது உண்மையென்றால், பல கேள்விகளுக்கு அவ்வாரியம் பதில் சொல்லியாக வேண்டுமென, உரிமைக் கட்சியின் தலைவருமான அவர் சொன்னார்.
சமய அமைப்புகளை, ROS எனப்படும் சங்கப் பதிவிலாகாவின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட தனியார் அமைப்புகளுக்குத் தாரை வார்க்க, 1960-ஆம் ஆண்டு அறப்பணி சட்டம் அனுமதிக்கிறதா என ராமசாமி கேள்வி எழுப்பினார்.
இந்து அறப்பணி வாரியம் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருவதால், மேற்கண்டவாறு குத்தகைக்கு விடவோ தனியாருக்கு மாற்றவோ தேசிய சட்டத்துறைத் தலைவரின் அனுமதி வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.
அல்லது, நிலம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டதென்பதால், பினாங்கு அரசு அல்லது ஆட்சிக் குழு உறுப்பினரின் ஒப்புதல் போதுமா என்றும் தெரியவில்லை.
தற்போதைக்கு பிறையில் உள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயம் இப்பட்டியலில் முதலிடத்திலிருப்பதாகக் கூறப்படுகிறது.
பழைய நிர்வாகத்தின் முறையற்ற மேலாண்மையால் அறப்பணி வாரியத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஸ்ரீ விநாயகர் ஆலயத்தையும், அதன் நிலத்தையும் தனியார் அமைப்புக்கு மாற்றத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஒருவேளை நிதிச்சுமை தான் இது போன்ற உத்தேச மாற்றங்களுக்குக் காரணமென்றால், அறப்பணி வாரியம் விவேகமாக நிர்வகிக்கப்படவில்லை என்றே அர்த்தம்.
ஆலயங்களை, தனியார் அமைப்புகளுக்குத் தாரை வார்ப்பதென்பது, இந்துக்களின் நலன்களைப் பாதுகாக்கும் அறப்பணி வாரியத்தின் நோக்கத்தையே சீர்குலைப்பதாக, முகநூல் வாயிலாக ராமசாமி சொன்னார்.