
கோலாலம்பூர், பிப் 18 – ஆலயங்கள் பழுதுபார்ப்பு மற்றும் அதன் நிர்வாகத்தினர் எதிர்கொள்ளும் நிலையை ஆய்வு செய்ய ஒரு கலாச்சார சுற்றுப்பயணத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் நடத்தியுள்ளார்.
கோயில் நிர்வாகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களுக்கு முறையான அரசாங்க ஆதரவைப் பெறுவதற்கும் தனது ஆய்வு பயணத்தின் நோக்கமாக அமைந்ததாக அவர் கூறினார்.
ஜனவரி 26ஆம் தேதியன்று கோலா கெடா மற்றும் அலோஸ்டாரில் உள்ள பல கோவில்களுக்குச் சென்ற அவர் , அதைத் தொடர்ந்து பிப்ரவரி 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் ஜோகூர் பாரு, பத்து பஹாட் , பாகோ மற்றும் மூவார் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஜொகூருக்கும் அவர் வருகை புரிந்தார்.
பல கோவில்கள் நிதி பற்றாக்குறை, தொழில்நுட்ப தடைகள், உதவி விண்ணப்ப செயல்பாட்டில் குழப்பம் போன்ற சவால்களை எதிர்நோக்கியுள்ளன.
எனவே, கிடைக்கக்கூடிய உதவி வாய்ப்புகளை சரியாக அறியாத அல்லது விண்ணப்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் கோயில் நிர்வாகத்திற்கு களத்திற்குச் சென்று வழிகாட்டுதல்களை வழங்க தான் முன்முயற்சி எடுத்தாக சண்முகம் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆலயமும் வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி , நமது சமூகத்தின் ஒற்றுமை மற்றும் கலாச்சாரத்தின் மையமாகவும் இருக்கிறது.
எனவே இந்தக் கோயில்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவதையும், அதற்குத் தகுந்த ஆதரவைப் பெற்று, நமது வலிமை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக மாறுவதையும் உறுதி செய்வது நமது கூட்டுப் பொறுப்பாகும் என சண்முகம் வலியுறுத்தினார்.