
கோத்தா பாரு, மார்ச்-9 – தாய்லாந்தின் சுங்கை கோலோக்கில் நேற்றிரவு நடத்தப்பட்ட வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.
கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ மொஹமட் யூசோஃப் மாமாட் அதனை உறுதிப்படுத்தினார்.
என்றாலும், அந்த அண்டை நாட்டின் அதிகாரத் தரப்பிடமிருந்து விரிவான விவரங்கள் பெறப்படும் என அவர் சொன்னார்.
தற்போதைக்கு அப்பகுதிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாமென்றும் அவர் மலேசியர்களை அறிவுறுத்தினார்.
உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 7.10 மணியளவில் அங்குள்ள முஸ்லீம்கள் நோன்பு துறந்த 1 மணி நேரத்தில் சுங்கை கோலோக் மாவட்ட அலுவலகத்தின் முன் அந்த இரட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் 2 தொண்டூழியப் போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதோடு, 8 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் நடந்த இடத்திலுள்ள Big C பேரங்காடியில், வழக்கமாக மலேசியர்கள் குறிப்பாக கிளந்தான் மக்களின் நடமாட்டம் அதிகம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.