இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் கற்பிக்க தேவையான ஆசிரியர்களை நியமிப்பீர் கல்வி அமைச்சுக்கு கோரிக்கை

கோலாலம்பூர், அக் 30 –
இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் கற்பிக்க தேவையான தமிழ் ஆசிரியர்களை நியமிக்கும்படி கல்வி அமைச்சுக்கு மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடு மற்றும் நலனபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் வெற்றிவேலன் மகாலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பல இடைநிலைப் பள்ளிகளில் இன்னமும் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்களை போதிப்பதற்கு தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர். இதனைல் பல மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பெரும் கவலையும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.
இடைநிலைப் பள்ளிகளில் சீன மொழியை கற்பிக்கத் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பாக 15 பெற்றோர்கள் கேட்டுக்கொண்டால் இதற்கான ஏற்பாடு செய்யப்படும் என கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் நாடாளுமன்றத்தில் இன்று கூறியிருப்பதை வரவேற்கிறோம்.
இந்த நடைமுறைக்கு ஏற்ப இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்களை போதிப்பதற்கு தேவையான ஆசிரியர்களை கல்வி அமைச்சு நியமிப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்
2023 ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி கருத்தரங்கில் இடைநிலைப் பள்ளிகளில் பத்து மாணவர்கள் இருந்தாலே தமிழ் வகுப்பு தொடங்கலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பிற்கு பின்னரும் இன்று வரை பல இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக தமிழ் வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இன்னும் சில பள்ளிகளில் எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக இலக்கிய பாடங்களும் போதிக்கப்படவில்லை.
எனவே இந்த பிரச்னையை கல்வி அமைச்சர் பட்லினா விரைந்து தீர்க்க வேண்டும்.
அதோடு தமிழ் விருப்பப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்ற பாடங்கள் அல்லாமல், தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்தைப் பாடமாக கற்பிக்கும் வகையில் பணியமர்த்தப்பட வேண்டும் என மலேசிய தமிழ்ப் பள்ளிகளின் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்புத் தலைவருமான வெற்றிவேலன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.



