
புத்ராஜெயா, பிப்ரவரி-22 – கண் வடிவிலான gummy ஜவ்வு மிட்டாய் விற்பனையை அனைத்துத் தளங்களிலும் சுகாதார அமைச்சு தடைச் செய்துள்ளது.
இணையம் வாயிலாகவும் உள்நாட்டுச் சந்தைகளிலும் இனி அவற்றை விற்க முடியாது.
தடையை மீறினால், 1983-ஆம் ஆண்டு உணவுச் சட்டம், 1985-ஆம் ஆண்டு உணவு விதிமுறைகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும்.
பினாங்கில் gummy ஜவ்வு மிட்டாய் தொண்டையில் சிக்கி Fahmi Hafiz Fakhruddin எனும் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருப்பதை அடுத்து, KKM இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
45 மில்லிமீட்டர் மற்றும் அதற்கும் குறைந்த அளவிலான
கட்டுப்படுத்தப்பட்ட ஜெல்லி தின்பண்டங்களில், “இது தொண்டையில் சிக்கிக் கொள்ளும் ஆபத்தைக் கொண்டது” , ” இது 3 வயதுக்கும் கீழ்பட்ட குழந்தைகள் உட்கொள்ள ஏற்றதல்ல” என்ற எச்சரிக்கை வாசகங்கள் லேபலில் இடம் பெற வேண்டியது கட்டாயம் என்பதையும் அமைச்சு சுட்டிக் காட்டியது.
உணவையும் தின்பண்டங்களையும் சரியாக மெல்லாத போதோ அல்லது முழுவதுமாக விழுங்கும் போதோ தொண்டையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாகிறது.
எனவே, பிள்ளைகளின் உணவுத் தேர்வை கண்காணிப்பதோடு, எதை சாப்பிடலாம் எதை சாப்பிடக் கூடாது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்குமாறும் பெற்றோர்களை KKM வலியுறுத்தியது.