இணைய முதலீட்டு மோசடி; RM 1 மில்லியன் பறிகொடுத்த ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர்

ஜோர்ஜ்டவுன், ஜனவரி-5,
பினாங்கில் ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர் ஒருவர், இணைய முதலீட்டு மோசடியில் RM1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார்.
67 வயது அவ்வாடவர், கடந்த ஆகஸ்டில் ஃபேஸ்புக் மூலமாக ஒரு பெண்ணுடன் அறிமுகமானார்.
200 விழுக்காடு இலாபம் கிடைக்கும் எனக் கூறி வாட்சப் வாயிலாக அப்பெண் அறிமுகப்படுத்திய இணைய முதலீட்டுத் திட்டத்தால் அவர் ஈர்க்கப்பட்டார்.
பின்னர் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து, 4 மாதங்களில் 22 முறை பணம் செலுத்தினார்.
மொத்தம் 760,000 ரிங்கிட், கொடுக்கப்பட்ட வங்கி கணக்குகளில் போடப்பட்டது.
அதற்கு இலாபமாக 7,488, 492 ரிங்கிட் கிடைக்கும் எனக் கூறப்பட்டது.
இலாபத்தை மீட்க முயன்றபோது, மோசடிக்காரர்கள் “கட்டணம்” மற்றும் “வரி” என்ற பெயரில் மேலும் பணம் கேட்டுள்ளனர்.
அப்போதும் சந்தேகம் வராததால், அவர் கூடுதலாக 242,200 ரிங்கிட்டை 6 தடவையாக செலுத்தினார்.
சொல்லியபடி இலாபத்தையும் தராமல், மேலும் மேலும் பணம் கேட்டு நச்சரித்த போதே, தாம் மோசடிக்கு ஆளானதை உணர்ந்து அம்முதியவர் போலீஸில் புகாரளித்தார்.



