
கோலாலம்பூர், அக்டோபர்-27, இந்துக்களின் தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், பேரங்காடிகளில் ஹாலோவீன் அலங்காரங்கள் வைக்கப்பட்டுள்ளது குறித்த வலைத்தளவாசி ஒருவரின் விமர்சனம், சமூக ஊடகங்களில் சூடான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஹாலோவீன் கொண்டாட்டம் எந்த காலத்தில் நமது கலாச்சாரமானது? சக மலேசியர்களின் உணர்வுகளுக்கு கொஞ்சமாவது மதிப்புக் கொடுங்கள் என
Puan Sri H என்று தன்னை அழைத்துக் கொண்ட அப்பயனர் பதிவிட்டிருந்தார்.
எந்தவொரு பேரங்காடியின் பெயரையும் தனியாகக் குறிப்பிடாமல் பொதுவாக அவர் விமர்சனம் செய்திருந்தார்.
அப்பதிவை 4,500-க்கும் மேற்பட்டோர் பகிர்ந்து வைரலாக்கி விட்டனர்.
பலர் Puan Sri H-ச்சின் கருத்தை ஆமோதித்து பேசிய நிலையில் சிலர் மறுக்கவும் செய்தனர்.
தனது அனுபவத்தில் ஹாலோவீன் கொண்டாட்டத்தால் தீபாவளி அலங்காரங்களுக்கு எந்த குறைச்சலுமில்லை என ஒருவர் கூறினார்.
இவ்வேளையில் பெரும்பாலான பேரங்காடிகள் தீபாவளி அலங்காரங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருப்பதை, மலேசியப் பேரங்காடிகள் சங்கம் உறுதிப்படுத்தியது.
ஷாப்பிங் செய்யும் மலேசியர்களிடையே தீபாவளி பெருநாள் தொடர்ந்து ஒரு முக்கிய அம்சமாக விளங்கி வருகிறது.
அதனுடன் ஒப்பிடுகையில் ஹாலோவீன் கொண்டாட்டம் இரண்டாம் பட்சமே என அச்சங்கத்தின் தலைவர் Phang Sau Lian, The Star-ரிடம் கூறினார்.
பேரங்காடிகள் என்பது வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் வெறும் விற்பனைத் தளமல்ல;
மாறாக, பல்வேறு கலாச்சார விழாக்களைக் கொண்டாடி, நவீன மற்றும் பாரம்பரிய முறையிலான அனுபவத்தை வழங்குமிடமாகும் என்றார் அவர்.
அகால மரணமடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதி மேலை நாடுகளில் பரவலாகக் கொண்டாடப்படும் இந்த ஹாலோவீன், இவ்வாண்டு தீபாவளி நாளான அக்டோபர் 31-ஆம் தேதி வருவது குறிப்பிடத்தக்கது.