
கோலாலாம்பூர், ஜூலை-25- இந்தியச் சமூகம் ஒன்றுபட்டால் அடுத்தப் பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சியைத் தீர்மானிக்கும் துருப்புச் சீட்டாக அவர்களால் உருவாக முடியும்.
பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவ்வாறு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மித்ரா நிதி விநியோகம் மந்தமடைந்திருப்பதாகக் கூறி, பாஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மக்களவைக்கு வெளியே செய்தியாளர் சந்திப்பு நடத்தியது குறித்து பேசுகையில், அவர் அவ்வாறு சொன்னார்.
இந்திய அரசு சாரா அமைப்புகள் மித்ரா நிதிக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் நிதிக்கு காத்திருப்பதாக, பாஸ் கட்சியைச் சேர்ந்த காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் Dr ஹலிமா அலி ( Dr Halimah Ali) கூறியிருந்ததும் அதிலடங்கும்.
பாஸ் எம்.பிகள் இது பற்றி பேசுவது தமக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான ரமணன், இதெல்லாம் இதுவரை நடந்திராத ஒன்றெனக் குறிப்பிட்டார்.
திடீரென எதிர்கட்சியினருக்கு இந்தியர்கள் மீது பாசம் வந்திருக்கிறது; இது நாள் வரை அது எங்கே போனது என ரமணன் கேட்டார்.
இந்தத் திடீர் பாசதுக்கெல்லாம் மயங்குபவர்கள் அல்ல இந்தியர்கள் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இந்தியர்களுப் போராடுவது போல் காட்டிக் கொள்ளும் இவர்களை இனியும் நம்புவதற்கு இச்சமூகம் தயாராக இல்லை எனக் குறிப்பிட்ட ரமணன், சிறுபான்மையினராக இருந்தாலும், ஒன்றுபட்டால் இந்தியச் சமூகம் பலம் பெற்றுத் திகழ முடியுமென்றார்.
குறிப்பாக 16-ஆவது பொதுத் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கியத் துருப்புச் சீட்டாக இந்திய வாகாளர்கள் திகழ்வர் என்றார் அவர்.
பினாங்கு, பிறையில், இந்தியத் தொழில்முனைவோர்ருக்கு 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கியப் பிறகு ரமணன் அவ்வாறு பேசினார்.