
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14- HYO எனப்படும் இந்து இளைஞர் இயக்கம் தனது 75வது வைர விழாவை அண்மையில் கோலாலம்பூரில் Tun Dr Siti Hasmah மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடியது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் Adam Adli Abdul Halim தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்சியில் இயக்கத்தின் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் பெற்றனர். விழாவின் சிறப்பு விருதான “ரத்னா ஸ்ரீ விருது” இரண்டு முன்னாள் HYO தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதுகளை துணையமைச்சர் அடாம் அட்லி வழங்கி கௌரவித்தார். மேலும் இயக்கத்தின் சிறந்த பங்கேற்பாளர்களில் 47 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
மலேசிய இளைஞர் பேரவை தலைவர் Mohd Izzat Affi Abdul Hamid , HYO-வின் நிறுவனர் ரத்னா ஸ்ரீ குமாரகுலசிங்கம் மற்றும் ரத்னா ஸ்ரீ பாலசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்திய சமூகத்தில், மலேசிய இளைஞர்களின் பல தலைமுறைகளை அதிகாரமளித்ததில் இந்து இளைஞர் இயக்கத்தின் நீடித்த மரபு மற்றும் அதன் முயற்சிகளை அடம் அட்லி பாராட்டினார்.
அடுத்த தலைமுறை தலைமைத்துவம், ஒற்றுமைக்கும் புத்தாக்கத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அமைப்பின் டிஜிட்டல் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக, புதிய நடமாடும் செயலி பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.
இது நிர்வாக கண்காணிப்பு, உறுப்பினர் ஈடுபாடு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக பணிகளை மேம்படுத்தும் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
இந்த விழா வெற்றிகரமாக நடைபெற உதவிய அனைத்து ஆதரவாளர்களுக்கும் மலேசிய இந்து இளைஞர் பேரவை தலைவர் ஆனந்தன் சுப்பிரமணியம் நன்றியைத் தெரிவித்தார்.