
ஜகார்த்தா, ஜனவரி-26-இந்தோனேசிய மாஸ்டர்ஸ் 2026 பூப்பந்துப் போட்டியில் மலேசியா வரலாறு படைத்துள்ளது.
ஒரே உலகத் தொடரில் தேசிய அணி 3 பட்டங்களை வென்றது இதுவே முதல் முறை.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் Goh Sze Fei – Nur Izzuddin இந்தோனேசியாவின் Raymond Indra மற்றும் Nikolaus Joaquin-னை 21-19, 21-13 என்ற நேரடி செட்களில் வீழ்த்தி மூன்றாவது பட்டத்தை கைப்பற்றினர்.
உலகத் தர வரிசையில் 9-ஆவது இடத்திலுள்ள Sze Fei – Izzudin, Istora Senayan அரங்கில் இந்தோனேசிய இரசிகர்களின் தொடர் ஆரவாரத்தையும் கூச்சலையும் மீறி வெற்றிப் பெற்றனர்.
158, 256 ரிங்கிட் பரிசுப் பணத்துடன் அவர்கள் நாடு திரும்புகின்றனர்.
முன்னதாக, Chen Tang Jie – Toh Ee Wei இணை, டென்மார்க் ஜோடியை 3 செட்களில் வீழ்த்தி கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றனர்.
மகளிர் இரட்டையர் பிரிவில் நட்சத்திர ஜோடியான Pearly Tan – M. Thinaah ஜப்பானிய வீராங்கனைகள் உடல்நலக் குறைவு காரணமாக ஆட்டத்திலிருந்து விலகியதால் பட்டத்தை பெற்றனர்.
இந்த மூன்று வெற்றிகளும், அதுவும் வெளிநாட்டுப் போட்டியாளர்களுக்கு மிகவும் சவால் மிக்க இந்தோனேசிய மண்ணில் கிடைத்திருப்பது மலேசியப் பூப்பந்து அணிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளன.



