
செந்தோசா, மார்ச்-10 – நாட்டில் நடந்து வரும் அண்மையச் சம்பவங்கள் தொடர்பில் அனைத்து தரப்பினரும் நிதானம் காக்க வேண்டும்;
விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்குமாறு சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டார்.
நிலைமையை மோசமாக்கும் வகையில் எந்தவொரு தரப்பினரும் உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சிக்கக்கூடாது; சட்டம் தன் கடமையைச் செய்து, எந்தத் தலையீடும் இல்லாமல் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றார் அவர்.
தேசிய நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவோர் இனரீதியான தூண்டுதலையும் நிராகரிக்க வேண்டுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளதையும் குணராஜ் வரவேற்றார்.
இந்த விஷயத்தை போலீஸ் விரைவாகக் கையாண்டுள்ளது; மலேசியர்களின் ஒற்றுமையை அச்சுறுத்த முயற்சிக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் இது ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், மலேசிய தொடர்பு- பல்லூடக ஆணையமான MCMC முயற்சியில் சம்ரி வினோத்தின் சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்ட பிறகும், அவர் அதனை மீண்டும் பதிவேற்றியுள்ளார்.
இவர் போன்ற நபர்களின் சினமூட்டும் நடவடிக்கைகள் தேசிய நல்லிணக்கத்திற்கு ஒரு வகையான சவாலாகும், இது தொடர அனுமதிக்கக் கூடாது என குணராஜ் சொன்னார்.
தேசிய ஒற்றுமை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது.
மலேசியா பல இன, பல மதங்களைக் கொண்ட நாடு; இதுவரை நாம் அனுபவித்து வரும் நல்லிணக்கம் தொடர்ந்து கட்டிக் காக்கப்பட வேண்டும்.
நம்மிடையே பிளவுகள் வருவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என குணராஜ் மேலும் கூறினார்.