
கோலாலம்பூர், மார்ச்-24 – சட்டவிரோத மறுசுழற்சி ஆலைகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, அமைச்சுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு முக்கியமாகும்.
இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் அவ்வாறு கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினைகளை திறம்பட தீர்க்க தனதமைச்சு, சுற்றுச்சூழல் துறை மற்றும் வீடமைப்பு ஊராட்சித் அமைச்சு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு மிக முக்கியம் என்றார் அவர்.
உலகளாவிய தரநிலைகளை பூர்த்திச் செய்ய, மறுசுழற்சி விகிதங்களை அதிகரிக்க வேண்டும்; இதன் மூலம் தொழில்களுக்கு போதுமான மூலப்பொருட்களை வழங்க முடிவதோடு, சட்டவிரோத இறக்குமதிகளை நம்பியிருப்பதையும் குறைக்க முடியும்.
மறுசுழற்சி செய்வதில் நம்மிடம் ஏராளமான நிபுணத்துவம் உள்ளது; ஆனால் 2 முக்கியப் பிரச்சினைகள் என்னவென்றால் சில தொழிற்சாலைகள் கச்சா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத நிலைமைகளில் இயங்குகின்றன; மற்றவை சட்டப்பூர்வமானவை ஆனால் கழிவுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்கின்றன என நிக் நஸ்மி சொன்னார்.
உள்ளூரில் கிடைக்கும் நிபுணத்துவத்தை நாம் பயன்படுத்தாவிட்டால் அது வீணாகிவிடும்; ஆனால் இந்நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் தரநிலைகளைப் பூர்த்திச் செய்வதையும் தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதையும் நாம் உறுதிச் செய்ய வேண்டும் என்றார் அவர்.
இன்று விஸ்மா பெர்னாமாவில் ‘காலநிலை மாற்றம்: மலேசியாவின் எதிர்காலம்’ என்ற Concorde Club நிகழ்வில் பங்கேற்றப் பிறகு, நிக் நஸ்மி செய்தியாளர்களிடம் பேசினார்.
அந்நிகழ்வில் பெர்னாமா தலைவர் டத்தோ ஸ்ரீ வோங் ச்சுன் வாயும் (Datuk Seri Wong Chun Wai) கலந்துகொண்டார்.