இறப்பு, கருமக்கிரியை & ஸ்ரார்த்த பூஜைகள் குறித்த வழிகாட்டி நூல்; டத்தோ ஸ்ரீ சரவணன் வெளியீடு

கோலாலாம்பூர், டிசம்பர் 22-சைவ மரபுப்படி இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகளைக் குறிக்கும் ‘சிவாகம மோக்த அபர க்ரியா பூஜா விதி” நூல் வெளியீட்டு விழா, நேற்று கோலாலாம்பூரில் சிறப்பாக நடைபெற்றது.
ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமைத் தாங்கி நூலை வெளியிட்டார்.
சைவநெறி விசாரதா, சிவாகம ரத்னா சிவஸ்ரீ S. லோகநாதன் குருக்கள் எழுதிய இந்த நூல், இறப்பு, கருமக்கிரியை மற்றும் ஸ்ரார்த்த பூஜைகள் குறித்த முழுமையான வழிகாட்டியாக அமைகிறது.
சிவ ஆகமங்களில் கூறப்பட்ட அபர பூஜை முறைகள், அதன் தத்துவ பின்னணி, நடைமுறை விளக்கங்கள் மற்றும் பயன்படுத்தப்படும் மந்திரங்கள் இதில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
“காலத்திற்கு ஏற்ற இந்த நூல் அனைவரையும் சென்றடைவதை உறுதிச் செய்வோம்” என டத்தோ ஸ்ரீ சரவணன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இந்த நூல், சிவ தீட்சை பெற்றவர்களுக்கும், இறப்பு பூஜைகள் நடத்துபவர்களுக்கும் உறுதுணையாக இருக்கும் என நம்புவதாக, நூலாசிரியர் லோகநாதன் குருக்கள் கூறினார்.
இந்து சமய மரபுகளை பாதுகாக்கும் முக்கியமான முயற்சியாகக் கருதப்படும் இந்நூல் வெளியீட்டு விழாவில், இந்து சமய குருக்கள், சமயவாதிகள், பொது மக்கள் என சுமார் 50 பேருக்கும் மேல் கலந்துகொண்டனர்.



