கோலாலம்பூர், பிப் 7 – 2025 புத்தாண்டு தொடங்கிய 33 நாட்களில் நாடு முழுவதிலும் ஏற்பட்ட வர்த்தக குற்றச் செயல்களில் 260 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 2 ஆம்தேதிவரை 5,153 புகார்கள் சம்பந்தப்பட்ட 26 கோடியே 28 லட்சத்து 2,072 ரிங்கிட் மோசடி பதிவாகியிருப்பதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசோப் ( Ramli Mohamed Yoosuf ) தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கிடைக்கப்பெற்ற 4,088 புகார்களில் ஏற்பட்ட 279. 8 மில்லியன் ரிங்கிட் இழப்பைவிட இது 26 விழுக்காடு அதிகமாகும்.
தினசரி வர்த்தக குற்றங்களில் 7.88 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் அதாவது 87.9 விழுக்காடு குற்றச் செயல்களில் 195.3 மில்லியன் ரிங்கிட் இணைய மோசடியாகும் என ரம்லி தெரிவித்தார் .
மேலும் 49.6 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 1,988 தொலைதொடர்பு மோசடிகள், 6.2 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 912 மின் வர்த்தகம் மோசடிகள், 125.7 மில்லியன் ரிங்கிட் தொடர்பிலான 765 முதலீட்டு மோசடி சம்பவங்களும் அடங்கும்.
இது தவிர 102 காதல் மோசடி சம்பவங்களில் 4.9 மில்லியன் ரிங்கிட் இழப்பு , 3.7 மல்லியன் ரிங்கிட் இழப்பைக் கொண்ட 512 போலி கடன் திட்டங்களும் இந்த மோசடியில் அடங்கும்.
போலீசார் மேற்கொண்ட 2,443 சோதனை நடவடிக்கையில் 2,523 பேர் கைது செய்யப்பட்டதோடு 1,315 சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டதாக ரம்லி தெரிவித்தார்.