
கோலாலம்பூர், டிசம்பர்-20 – கூடுதலாக வருமான வரி செலுத்தியவர்களுக்கு இவ்வாண்டு இதுவரையில் RM17 பில்லியன் தொகை, திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.
இது டிசம்பர் 18 வரைக்குமான நிலவரம் என உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN அறிக்கையொன்றில் கூறியது
3.53 மில்லியன் வரி செலுத்துநர்களை இது உட்படுத்தியுள்ளது.
எஞ்சிய 2 பில்லியன் ரிங்கிட் தொகை இம்மாதக் கடைசிக்குள் திருப்பிச் செலுத்தப்படுமென LHDN தெரிவித்தது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் அறிவித்த 4 பில்லியன் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீடும் இதிலடங்கும்.
முதல் 1 பில்லியன் ரிங்கிட், மூன்றாண்டுகளுக்கும் மேல் நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களைத் தீர்க்கவும், அடுத்த 1 பில்லியன் ரிங்கிட் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் வரிப் பணத்தைத் திரும்பப் பெறாமலிருப்போருக்கு வழங்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தனிநபர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வரிப் பணத்தைத் திருப்பிச் செலுத்த முன்னுரிமை வழங்கப்பட்டது.
தவறான அல்லது குறைவான வங்கி கணக்கு தகவல்களால் சில சமயம் பணத்தைத் திருப்பித் தர முடியவில்லை.
எனவே, வரி செலுத்துவோர் தங்களின் வங்கி கணக்கு விவரங்கள் வாரியத்துடன் சரியாகவும், புதுப்பிக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தவிர, சட்டத் தகராறில் இருந்தாலோ, வரி செலுத்துவோருக்கு பிற ஆண்டுகளுக்கான நிலுவை மதிப்பீடுகள் இருந்தாலோ, அல்லது தகுதியான நிறுவனம் கலைக்கப்பட்டிருந்தாலோ, அவை தீர்க்கப்படும் வரை பணம் திருப்பித் தரப்படாது என்றும் LHDN தெளிவுப்படுத்தியது.



