
கோலாலம்பூர், மார்ச்-6 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் மீதான ஊழல் விசாரணையை அனைவரும் மதிக்க வேண்டும்; அதை விடுத்து யாரும் முன்கூட்டியே தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணை நடத்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-க்கு நாம் வாய்ப்பு வழங்க வேண்டுமென்றார் அவர்.
கொள்கை மிகவும் தெளிவானது – அதாவது யாராக இருந்தாலும் அவர் விசாரிக்கப்படுவார்;
அமைச்சர்களும் அதில் விதிவிலக்கு அல்ல என, நாடாளுமன்றப் பணியாளர்களுடனான நோன்புத் துறப்புக்குப் பிறகு பிரதமர் பேசினார்.
9-ஆவது பிரதமராக இருந்த போது Keluarga Malaysia கொள்கை விளம்பர நடவடிக்கைக்கு 700 மில்லியன் ரிங்கிட் செலவான விவகாரத்தில் இஸ்மாயில் சாப்ரியை சந்தேக நபராக அறிவித்து, MACC விசாரணை நடத்தி வருகிறது.
நாளை வெள்ளிக்கிழமை இரண்டாவது முறையாக அவர் வாக்குமூலம் அளிக்கச் செல்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்மாயில் சாப்ரியின் 4 முன்னாள் அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களிலிருந்து 170 மில்லியன் ரிங்கிட் பணமும், 7 மில்லியன் மதிப்பிலான 16 கிலோ தங்கக்கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.