
கோலாலம்பூர், மார்ச்-10 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதான ஊழல் விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, இதுவரை 32 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது.
மேலும் 23 பேர் விசாரணைக்கு அழைக்கப்படவிருப்பதாக MACC வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூடுதலாக, ஏற்கனவே விசாரிக்கப்பட்ட 4 பேர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சில நிதி நிறுவனங்களிடமிருந்து வங்கி ஆவணங்களும் வர வேண்டியிருப்பதாக அவ்வட்டாரம் கூறியது.
இரண்டாவது முறையாக இஸ்மாயில் சப்ரியின் வாக்குமூலத்தை மார்ச் 5-ஆம் தேதி MACC பதிவுச் செய்திருக்க வண்டும்; ஆனால் அவருக்கு உடல்நலம் சரியில்லாததால் மார்ச் 7-ஆம் தேதிக்கு அது ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது இன்னொரு மருத்துவ விடுப்புச் சான்றிதழைக் காட்டியதால், வாக்குமூலப் பதிவு மீண்டும் தள்ளிப் போனது; தற்போது மார்ச் 12 வரை அவர் மருத்துவ விடுப்பில் இருக்கிறார்.
விசாரணையை தொடர்ந்து ஒத்தி வைக்கும் அளவுக்கு இஸ்மாயில் சப்ரியின் உடல்நிலை உண்மையிலேயே மோசமாக இருக்கின்றதா என்பதை கண்டறிய, MACC, அவரின் மருத்துவரையும் அழைத்து விசாரித்திருக்கிறது.
அந்த ஒன்பதாவது பிரதமரின் உடலுக்கு உண்மையிலேயே என்னதான் பிரச்னை என்பதை தாங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியுள்ளதாக அந்த MACC வட்டாரம் தெரிவித்தது.
2021 முதல் 2022 வரை பிரதமராக இருந்த போது Keluarga Malaysia கொள்கை விளம்பர நடவடிக்கைகளுக்கு 700 மில்லியன் ரிங்கிட் செலவானது தொடர்பில் மார்ச் ஒன்றாம் தேதி இஸ்மாயில் சப்ரி 5 மணி நேரங்கள் விசாரிக்கப்பட்டார்.
பின்னர், உயர் இரத்த அழுத்தப் பிரச்னையால் வீட்டில் மயங்கி விழுந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பணச்சலவை மீதான MACC விசாரணையில் இஸ்மாயில் சப்ரி சாட்சியல்ல, மாறாக சந்தே நபர் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.