
டுங்குன், பிப்ரவரி-28 – திரங்கானு, டுங்குன் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை செய்து, பல்வேறு வகையான பட்டாசுகள் மற்றும் வாணவெடிகள் அடங்கிய 300-க்கும் மேற்பட்ட பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
பிற்பகல் 1 மணியளவில் நடத்தப்பட்ட அச்சோதனையில், 43 வயது ஆடவரும் கைதானார்.
பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அச்சோதனை நடத்தப்பட்டதாக, டுங்குன் போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் மைசுரா அப்துல் காடிர் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் வாணவெடிகளின் மதிப்பு சுமார் 7,000 ரிங்கிட்டாகும்; அவற்றில் சில பட்டாசுகள் சந்தையில் விற்க அனுமதிக்கப்படாதவை என மைசுரா சொன்னார்.
கைதான நபருக்கு பட்டாசுகளையும், வாணவெடிகளையும் வைத்திருக்கவோ விற்பனை செய்யவோ உரிமமோ அல்லது அனுமதியோ இல்லை என்பதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் எங்கிருந்து அவை தருவிக்கப்பட்டன என்பது குறித்து விசாரணைத் தொடருவதாக மைசுரா கூறினார்.
இரமலான் மற்றும் நோன்புப் பெருநாள் காலத்தில் டுங்குன் சுற்று வட்டாரங்களில் விற்பதற்காக அவை கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.