பெய்ரூட், செப்டம்பர் -29 – லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில், அதன் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா (Sayyed Hassan Nasrallah) கொல்லப்பட்டார்.
அதனை உறுதிச் செய்துள்ள ஹிஸ்புல்லா இராணுவம், அச்செயலுக்கு இஸ்ரேல் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றது.
தலைவனின் மரணத்துக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம்.
அதே சமயம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக, எதிரிகளுக்கு எதிரான புனிதப் போரைத் தொடருவோம் என்று அவ்வியக்கத்தினர் உறுதி பூண்டுள்ளனர்.
இவ்வேளையில், ஹசன் நஸ்ரல்லா இனியும் உலகத்தை அச்சுறுத்த முடியாது; ஆனால் இது முடிவல்ல, இனியும் முன்னோக்கிச் செல்வோம் என இஸ்ரேலிய இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுமார் 32 ஆண்டுகளாக இயக்கத்தை வழிநடத்தி சக்திவாய்ந்த தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லாவின் இழப்பு, ஹிஸ்புல்லாவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
லெபனான் மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், உலகளவிலும் இது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியத் தலைவர்களின் படுகொலைக்கு வழிவகுக்கும் என்பதால், இஸ்ரேலுடன் ஒரு பெரிய போருக்கு இதுவரை ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த ஹிஸ்புல்லா, இனி தனது யுக்தியை எப்படி மாற்றியமைக்கும் என கேள்வி எழுந்துள்ளது.
அதற்கு முன்பாக அவ்வமைக்கு இனி தலைமையேற்கப் போவது யாரென்பதற்கு விடை கிடைத்தாக வேண்டும்.