கோலாலம்பூர், நவம்பர்-15 – மலேசியாவில் Starbucks காப்பிக் கடைகளை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ள Berjaya Food Bhd, இஸ்ரேல் ஆதரவு பொருட்களைப் புறக்கணிக்கும் இயக்கத்தால், தொடர்ச்சியாக நான்காவது காலாண்டில் நட்டத்தைப் பதிவுச் செய்துள்ளது.
செப்டம்பர் 30-ல் முடிவடைந்த காலாண்டில் 33.68 மில்லியன் ரிங்கிட் நிகர நட்டத்தை அது பதிவுச் செய்துள்ளது.
இதே ஓராண்டுக்கு முன், 19.03 மில்லியன் நிகர இலாபத்தை அந்நிறுவனம் பதிவுச் செய்திருந்தது.
அக்காலாண்டுக்கான வருமானம் 278.53 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 124.19 மில்லியன் ரிங்கிட்டாகப் பாதியாகக் குறைந்திருப்பதாக, கோலாலம்பூர் பங்குச் சந்தைக்கு அனுப்பிய அறிக்கையில் Berjaya Food கூறியுள்ளது.
மேற்காசிய நெருக்கடியால் உலகளவில் நீடிக்கும் தாக்கத்தின் விளைவே அதுவென அந்நிறுவனம் விளக்கியது.
நடப்புக் காலாண்டுக்கு இலாப ஈவும் அறிவிக்கப்படவில்லை.
வர்த்தகச் சூழல் பெரும் சவாலாக இருந்தாலும், அடுத்து வரும் காலாண்டுகளில் நிலைமை படிப்படியாக முன்னேற்றம் காணும் என Berjaya Food நம்பிக்கைக் கொண்டுள்ளது.
மலேசியாவிலும், புருணையிலும் Starbucks நடத்துவதைத் தவிர்த்து, மலேசியாவில் Kenny Rogers Roasters உணவகங்களையும், பிரபல கேக் கடையான Paris Baguette-வை இங்கும் பிலிப்பின்சிலும் நடத்தும் உரிமையை Berjaya Food பெற்றுள்ளது.