
ஈப்போ, ஜனவரி-31 – ஈப்போ சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தின் (LTSAS) விரிவாக்கப் பணிகளுக்கு, அரசாங்கம் 60 மில்லியன் ரிங்கிட் நிதியை அங்கீகரித்துள்ளது.
முதல் கட்டமாக 8 மில்லியன் ரிங்கிட்டும், இரண்டாம் கட்டத்திற்கு 52 மில்லியன் ரிங்கிட்டுமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்திருப்பதன் மூலம் நீண்ட நாள் கனவைப் பிரதமர் நிறைவேற்றியுள்ளார்; இது மாநில மக்களுக்கு அவரின் சீனப் புத்தாண்டுப் பரிசு என வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
விரிவாக்கத்தின் வழி, LTSAS விமான நிலையம் ஆண்டுக்கு 700,000-க்கும் குறையாதப் பயணிகளைக் கையாள முடியும்; தற்போது ஆண்டுக்கு 500,000 பயணிகள் அதனைப் பயன்படுத்துகின்றனர்.
விமான நிலையத்தின் விரிவாக்கம், பேராக் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயரச் செய்யும்; குறிப்பாக பினாங்கு அனைத்துலக விமான நிலையம் அல்லது KLIA வழியாகச் செல்லாமல், மாநிலத்திலிருந்து பொருட்களை நேரடியாகவே ஏற்றுமதி செய்ய வழி ஏற்படுமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தவிர, பேராக்கை, தாய்லாந்து, ஜப்பான் போன்ற புதிய வழித் தடங்களுக்கும் இணைக்க வாய்ப்பேற்படுமென்றார் அவர்.
ஈப்போவில் நடைபெற்ற பேரா சீன வர்த்தக மற்றும் தொழில் சபையின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.