ஈப்போ, டிசம்பர்-13, ஈப்போ, அருகே PLUS நெடுஞ்சாலையில் உள்ள மெனோரா சுரங்கப் பாதையில் ஓராண்டாக நிலவி வந்த இணையச் சேவைத் தடங்கல், ஒரு வழியாக தீர்க்கப்பட்டுள்ளது.
Repeater எனப்படும் சமிக்ஞை வலிமைப் பெருக்கி கருவிகள் சேதமடைந்ததே இதுநாள் வரை அப்பிரச்னைக்குக் காரணமென, தொடர்பு, பல்லூகம் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கான பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் மொஹமட் அஸ்லான் ஹெல்மி (Mohd. Azlan Helmi) தெரிவித்தார்.
அவற்றை சரிசெய்யும் பணிகள் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய சேவை வழங்குநரின் உதவியோடு, சேதமடைந்த கருவிகளை புதியத் தொழில்நுட்ப சாதனங்களுக்கு மாற்றியுள்ளோம் என்றார் அவர்.
இன்று மெனோரா சுரங்கப் பாதையில் இணையத் தொடர்பு மீட்சிக் கண்டிருப்பதாக, அங்கு வருகை மேற்கொண்டு நிலைமைகளைக் கண்டறிந்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
அடிக்கடி மரண விபத்துகள் நிகழும் அம்மலைப் பகுதியில் இணையச் சேவை இருக்க வேண்டியதன் அவசியத்தை பல்வேறு தரப்புகள் சுட்டிக்காட்டியதை அடுத்து, அதனைக் கையாள மாநில அரசு தொடர்பு செயற்குழுவை அமைத்தது.
இந்நிலையில் புதிய சேவை வழங்குநரான EdgePoint நிறுவனத்துடன் பேசி, சுரங்கப்பாதை கட்டுமானத்திற்கு சேதாரம் ஏற்படாத வகையில் எந்தத் துளையிடுதலும் (drilling) இல்லாமல் புதிய repeater சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வேளையில் மெனோரா சுரங்கப் பாதையிலிருந்து வெளியேறி வடக்கே நோக்கிச் செல்லும் பாதைகளில் ஆங்காங்ஙே இன்னமும் இணையத் தொடர்பு பலவீனமாக உள்ளது.
MCMC எனப்படும் மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, அப்பகுதிகளில் சிறு சிறு கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன.
அப்பரிந்துரை, ஒப்புதலுக்காக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்திடம் அனுப்பப்பட்டுள்ளதாக அஸ்லான் சொன்னார்.