
சென்னை, பிப்ரவரி-23 – முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது; ஆனால் தூக்கி வீசப்படும் முட்டை ஓடுகளுக்கு, உடைந்த எலும்புகளை குணமாக்கும் சக்தி இருப்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்.
முட்டை ஓடுகளின் அந்த மகத்தான மருத்துவ குணத்தை தமிழகத்தின் ஆராய்ச்சிக் குழு உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது.
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முட்டை ஓடுகளிலிருந்து தயாரிக்கப்படும் திரவத்தை எலும்பு முறிவு, பல் மற்றும் எலும்பியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண பயன்படுத்தலாம் என கண்டறிந்துள்ளனர்.
இதுவரை 450க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் அது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முட்டை ஓடுகளில் கால்சியம் பாஸ்பேட் கனிமமான ஹைட்ராக்ஸிபடைட்டை (Hydroxyapatite) வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கான இரண்டு தொழில் நுட்பங்களுக்கு அக்குழு காப்புரிமை பெற்றுள்ளது.
ஹைட்ராக்ஸிபடைட் என்பது எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படும் ஒரு வகை கால்சியம் பாஸ்பேட் தாதுப் பொருளாகும்.
இறக்குமதி செய்யப்படும் எலும்பு ஒட்டுக்களின் ( bone graft) விலையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இந்த ‘முட்டை ஓடு தொழில்நுட்பத்துக்குச்’ செலவாகும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
வெள்ளை, மஞ்சள் கருக்களை பயன்படுத்திய பிறகு குப்பையில் வீசப்படும் முட்டை ஓடுகளுக்குள், இப்படி ஒரு மருத்துவ குணம் ஒளிந்திருப்பது கண்டுபிடித்த தமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.