ஜோகூர் பாரு, நவம்பர்-13, புத்தாண்டு தொடங்கி உணவுகளின் விலைகளை குறைந்தது 5 விழுக்காடு அதிகரிக்க திட்டமிட்டுள்ள ஜோகூர் இந்திய முஸ்லீம் தொழில்முனைவோர் சங்கத்திடம் இன்று விளக்கம் பெறப்படும்.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் மொஹமட் அலி (Datuk Armizan Mohd Ali) அதனை உறுதிப்படுத்தினார்.
அவ்விலையேற்ற பரிந்துரை குறித்து, 2011 விலைக்கட்டுப்பாடு மற்றும் கொள்ளை இலாப எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விளக்கம் அளிக்க வருமாறு அச்சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அவ்விஷயத்தில் யாரும் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொள்வதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம் என அமைச்சர் சொன்னார்.
ஏற்கனவே இது போன்ற விலையேற்றங்களை அறிவித்த தரப்புகளை அழைத்து விளக்கம் கேட்ட போது, அவற்றின் காரணங்கள் நியாயமானதாக இல்லை என கண்டறியப்பட்ட சம்பவங்களையும் அர்மிசான் சுட்டிக் காட்டினார்.
ஏற்கனவே உணவக செலவினங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் துறை ஊழியர்களுக்கான புதிய குறைந்தபட்ச சம்பளமும் அடுத்தாண்டு அமுலுக்கு வருவதால் நிலைமை மேலும் மோசமாகலாம்.
எனவே அதனைச் சமாளிக்க, ஜோகூரில் உள்ள சுமார் 300 இந்திய முஸ்லீம் உணவகங்கள் வரும் ஆண்டில் உணவு விலைகளை குறைந்தது 5 விழுக்காடு உயர்த்தவிருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.