Latestமலேசியா

உத்தேச ‘நெரிசல் கட்டணம்’ நகரங்களில் போக்குவரத்து நெரிசலை 20% குறைக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது – சாலிஹா

கோலாலம்பூர், பிப்ரவரி-27 – மாநகருக்குள் நுழைய வாகனமோட்டிகளுக்கு நெரிசல் கட்டணம் விதிப்பதன் மூலம், தலைநகரில் போக்குவரத்து நெரிசலை 20 விழுக்காடு குறைக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தஃபா அதனைத் தெரிவித்துள்ளார்.

அத்திட்டம் வெற்றியளிக்க வேண்டுமென்றால், கட்டண விகிதத்தை மிகக் குறைந்த அளவுக்கு நிர்ணயிக்க முடியாது; மாறாக, வாகனமோட்டிகள் அச்சாலைகளைப் பயன்படுத்துவதைத் ‘தடுக்கும்’ அளவுக்கு அவ்விகிதம் அமைந்திருக்க வேண்டுமென்றார் அவர்.

அதே சமயம், வாகனமோட்டிகளுக்கு சுமையை ஏற்படுத்தும் அளவுக்கு கட்டணத்தை ஒரேடியாக உயர்த்தி விடவும் முடியாது என மக்களவையில் அமைச்சர் கூறினார்.

நியூ யோர்க்கில் அமுலில் உள்ள ‘Electronic License Plate Reader’ சிங்கப்பூரில் அமுல்படுத்தப்படும் ‘Electronic Road Pricing’ ஆகிய முறைகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

லண்டனில் உள்ள ‘Congestion Charge Zone’ ஜகார்த்தாவில் உள்ள ‘Road Space Rationing’ திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன.

இவ்வேளையில், இந்த ‘நெரிசல் கட்டண முறை’ ஒரு முழுமையான ஒருங்கிணைக்கப்பட்ட பொது போக்குவரத்து முறையைக் கொண்டிருப்பதற்கு முன்பாக, நகரங்களில் அமுல்படுத்துவதற்குப் ஏற்றதல்ல என்ற போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்கின் கருத்தை Dr சாலிஹா ஏற்றுக் கொண்டார்.

மோசமான இணைப்பு வசதி காரணமாக, பொதுப் போக்குவரத்தை விட, சாலைப் பயனர்கள் சொந்த வாகனங்களைக் கொண்டு வருவதை விரும்புவதே அதற்குக் காரணமாகும்.

இந்நிலையில், நியாயமான, சமமான மற்றும் பயனுள்ள அமுலாக்கத்தை உறுதிச் செய்வதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய கலந்தாய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என அவர் சொன்னார்.

மாநகரில் உச்ச நேர நெரிசல்களைக் குறைக்கும் நோக்கில், 2040 கோலாலம்பூர் போக்குவரத்து பெருந்திட்டத்தின் கீழ் இந்த உத்தேசத் திட்டம் பரிசீலிக்கப்படுவதாக முன்னதாக Dr சாலிஹா கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!