
லண்டன், டிச 12 – அடுத்த ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கான தேசிய அணி ஒதுக்கீட்டின் டிக்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு FIFA எனப்படும் அனைத்துலக காற்பந்து சம்மேளனத்திடம் ஐரோப்பா காற்பந்து ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சாதாரண ரசிகர்களைப் போட்டியிலிருந்து விலக்கி வைக்கும் அபாயம் உள்ள மிகவும் கூடுதலான டிக்கெட் விலைகளை FIFA விதிப்பதாகக் ஐரோப்பிய காற்பந்து ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தேசிய சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கான விலைகள் – பொதுவாக அதிகாரப்பூர்வ ஆதரவாளர்களின் கிளப்புகள் அல்லது விசுவாசத் திட்டங்கள் மூலம் விநியோகிக்கப்படுவதோடு இது அளவுக்கு அதிகமான விலையில் இருப்பதாக ஐரோப்பிய ரசிகர்கள் அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து FIFA உடனடி கருத்துரைக்கவில்லை.
தேசிய சங்கங்களுக்கு அமைதியாக விநியோகிக்கப்பட்ட விலை அட்டவணைகளின் அடிப்படையில், முதல் குழுப் போட்டியிலிருந்து இறுதிப் போட்டி வரை தங்கள் அணியைத் தொடர்ந்து வரும் ஒரு ஆதரவாளர் குறைந்தபட்சம் 6,900 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகியிருப்பதாக ஐரோப்பய காற்பந்து ஆதரவாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கு ரசிகர்கள் செலவழித்த செலவை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமாகும்.
இறுதிப் போட்டி வரை டிக்கெட்டுகளை வாங்கும் உரிமையைப் பெறுவதற்காக, தேசிய அணி ஆதரவாளர்கள் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முழுத் தொகையையும் செலுத்துமாறு கேட்கப்படுவதாகவும் ஐரோப்பிய ரசிகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
FIFA நிர்ணயித்த விலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக ஐரோப்பிய காற்பந்து ரசிகர்கள் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோனன் எவைன் (Ronan Evain ) Reutersரிடம் கூறினார்.



