Latestமலேசியாவிளையாட்டு

உலகத் தர வரிசையில் ஏழாமிடத்திற்கு முன்னேறி சிவசங்கரி அதிரடி

கோலாலம்பூர், பிப்ரவரி-20 – தேசிய ஸ்குவாஷ் தாரகை எஸ்.சிவசங்கரி உலகத் தர வரிசையில் ஏழாவது இடத்திற்கு முன்னேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பெருமைப்படத்தக்க இச்சாதனையின் மூலம், 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியின் போது மலேசியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் விளங்குவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

2028-ஆம் ஆண்டில், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் முதன் முறையாக ஸ்குவாஷ் இடம் பெறவிருக்கின்றது.

இந்த இளம் வயதில் உலக அளவில் ஏழாவது மிகச் சிறந்த ஸ்குவாஷ் வீராங்கனையாக உயர்ந்திருப்பது, இவ்வளவு காலமும் தான் போட்ட கடும் உழைப்புக்கான பிரதிபலன் என சிவசங்கரி வருணித்தார்.

இதோடு திருப்தியடையாமல், ஆட்டத் தரத்தை மேம்படுத்தி தர வரிசையில் தொடர்ந்து முன்னேற அவர் உறுதிபூண்டுள்ளார்.

25 வயது சிவசங்கரி, அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி (Cincinnati) கிண்ண ஸ்குவாஷ் போட்டியில் வாகை சூடினார்.

ஸ்குவாஷ் உலகில் முக்கியப் போட்டிகளில் ஒன்றான அதில் வெற்றிப் பெற்றதானது, சிவசங்கரியின் அர்ப்பணிப்பு மற்றும் நிலையான ஆட்டத் தரத்திற்கான சான்றாகும்.

சிவசங்கரியின் முன்னேற்றத்தைப் பார்க்கும் போது, தேசிய ஸ்குவாஷ் சகாப்தம் டத்தோ நிக்கோல் டேவிட்டின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, ஒரு நாள் உலகின் முதல் நிலை ஸ்குவாஷ் வீராங்கனையாக அவர் வருவார் என்பது திண்ணம்.

இந்நிலையில், இவ்வாண்டு தனது இரண்டாவது வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றும் முயற்சியில் அடுத்த மாதம் நியூ சிலாந்து பொது விருது மற்றும் ஆஸ்திரேலியா பொது விருது போட்டிகளில் சிவசங்கரி களமிறங்குகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!