
கோலாலம்பூர், ஏப்ரல்-26- உலகின் மிகச் சிறந்த 50 கெட்டிக் குழம்புகள் பட்டியலில், Kari Ayam எனப்படும் மலேசியக் கோழிக் கறி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சுவைகளின் கலைக்களஞ்சியம், பாரம்பரிய உணவுகள், உள்ளூர் பொருட்கள் மற்றும் அசல் கைமணம் மாறாத உணவகங்களின் ‘உலக வரைபடம்’ என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் TasteAtlas அப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான அப்பட்டியலில் Kari Ayam முதலிடத்தைப் பிடித்த வேளை, தாய்லாந்தின் பாரம்பரிய Phanaeng Curry இரண்டாமித்தையும், ஆர்மேனியா நாட்டின் Dzhash மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.
இந்தியாவின் Murkh Makhani அல்லது பட்டர் சிக்கன் குழம்புக்கு நான்காமிடம் கிடைத்துள்ளது.
ஈரான் நாட்டின் Kalle Pache குழம்பு ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
தனது உலகலாய உறுப்பினர்களின் கருத்துகள், பாரம்பரிய உணவுகளின் தரம் மற்றும் கைமணம் மாறாத சுவை போன்ற அம்சங்களின் அடிப்படையில் அப்பட்டியலை வெளியிட்டுள்ளதாக, TasteAtlas தனது இணையத்தளத்தில் கூறியது.
இவ்வேளையில் முதல் 10 இடங்களில் இந்தோனேசியாவின் Rendang ஆறாமிடத்தையும், இந்தியாவின் கொத்திறைச்சிப் பிரட்டலான Keema எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
துருக்கியின் Hunkar Begendi குழம்புக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது.
உலகளவில் முதல் 10 இடங்களில் 8 இடங்களைக் கைப்பற்றி ஆசிய நாடுகளின் பாரம்பரியக் குழம்புகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
TasteAtlas இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட உணவுகளையும் பானங்களையும் பட்டியலிட்டுள்ளது.
இன்னும் ஆயிரக்கணக்கானவற்றைத் தேடி ஆராய்ந்து பட்டியலிடும் பணியில் அது தற்போது மும்முரமாக உள்ளது.
அவற்றில் ஏராளமானவை, மறக்கப்பட்ட மற்றும் அதிகம் அறியப்படாத உணவுகள் மற்றும் பானங்களாகும்.