மும்பை, அக்டோபர்-11 – மறைந்த இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா ஆசையாய் வளர்த்து வந்த நாய், அவரைப் பிரிய மனமில்லாமல் உடலுக்கு அருகே அமர்ந்துகொண்ட காட்சி பார்ப்போரின் மனதை நெகிழச் செய்தது.
பொது மக்களின் அஞ்சலிக்காக கிடத்தி வைக்கப்பட்டிருந்த ரத்தன் டாடாவை கடைசி முறையாகப் பார்க்கும் வகையில், கோவா (Goa) என்ற பெயர் கொண்ட அந்நாய் அழைத்து வரப்பட்டது.
இத்தனை காலமும் தன்னை கொஞ்சி மகிழ்ந்து பராமரித்து வந்த எஜமானர் வெகு தூரம் செல்கிறார் என்பதை புரிந்துகொண்டது போல, அந்நாய் ரத்தன் டாடாவின் பூதவுடல் அருகே அமைதியாக அமர்ந்துகொண்டது.
அதன் முகத்தில் ஒரு வித பரிதவிப்பைக் காண முடிந்தது.
Goa நாயை தேற்றும் வகையில் உடனிருந்த பணியாளர்கள் அதனை தடவிக் கொடுத்தனர்.
டாடா குழுமத்தின் அதிகாரப்பூர்வ X தளத்தில் பகிரப்பட்டுள்ள அவ்வீடியோ வைரலாகி பார்ப்போரின் கண்களைக் குளமாக்கின.
இந்த Goa நாய் பலரும் நினைப்பது போல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலைமதிப்புள்ள நாய் அல்ல.
மாறாக Goa-வில் ஆதரவின்றி சாலைகளில் சுற்றித் திரிந்த நாயாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் Goa சென்ற போது தன்னையே சுற்றி சுற்றி வந்த அந்நாயின் பாசத்தால் உருகிய ரத்தன் டாடா, அதைத் தத்தெடுத்து மும்பைக்கே அழைத்து வந்து விட்டார்.
அதற்கு Goa என்றே பெயரும் வைத்து விட்டார்.
இந்தியாவே போற்றும் பெரும் தொழிலதிபராக ஒரு பக்கம் கோலோச்சினாலும், மனிதநேயப் பண்பாளராகவும் பிராணிகள் மற்றும் விலங்குகளின் பிரியராகவும் அறியப்பட்ட மாமனிதர் ரத்தன் டாடா, வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் மும்பையில் காலமானார்.