
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19- தேசிய நலன்களை மேம்படுத்துவதற்காக, அரசாங்கக் கூட்டணிக்கு வெளியே உள்ள அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய எதிர்க்கட்சி முன்னணிக்கான பெர்சத்துவின் முன்மொழிவுக்கு உரிமை கட்சி தனது முழு ஆதரவை வழங்குமென்று உறுதியளித்துள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலில் சீன மற்றும் இந்திய வாக்காளர்களிடையே, எதிர்க்கட்சியின் பலத்தை ஒருங்கிணைக்க இதுபோன்ற ஒரு கூட்டணி உதவும் என்று உரிமை கட்சியின் தலைவர் பி. ராமசாமி கருத்துரைத்துள்ளார்.
நேற்று முஹிடினுடன் நடந்த சந்திப்பில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரள்வது தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இதில் ராமசாமி, பெஜுவாங் (Pejuang) தலைவர் முக்ரிஸ் மகாதிர் (Mukhriz Mahathir), மூடா தலைவர் அமிர ஐஸ்யா அப்துல் அஜீஸ் (Amira Aisya Abdul Aziz ), புத்ரா தலைவர் இப்ராஹிம் அலி (Ibrahim Ali), பார்ட்டி சோசியலிஸ் மலேசியா (Parti Sosialis Malaysia) துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் மற்றும் மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவர் பி. வேத மூர்த்தி ஆகியோரும் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதும் வருகின்ற தேர்தலில் ஐக்கிய எதிர்க்கட்சி முன்னணி வெற்றி பெறுமா இல்லையா என்பது பல காரணிகளைப் பொறுத்தது என்றும் ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.