டாவோஸ் (சுவிட்சர்லாந்து), ஜனவரி-23, மற்ற நாடுகளின் சொந்த பிரச்னையில் மலேசியாவும் ஆசியானும் தலையிடக் கூடாது என்ற நிலைப்பாட்டை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுஉறுதிபடுத்தியுள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பா போன்றவற்றிலிருந்து மட்டும் நமக்கு முதலீடு போதாது; வர்த்தக நாடு என்ற முறையில் இந்திய, சீன, ஆஸ்திரேலிய முதலீடுகளையும் மலேசியாவும் ஆசியானும் கவர்ந்திழுக்க வேண்டும்.
ஆக அணி சேராமல் நடுநிலை வகிப்பதே நமக்கு நல்லது என பிரதமர் சொன்னார்.
எவருடனும் ஒத்துபோகும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஆசியான் இருக்கிறது.
எனவே, நமக்கு சம்பந்தமில்லாத பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமலிருப்பது அவசியமென்றார் அவர்.
இவ்வேளையில், ஆசியான் அமைப்பானது தனக்குள்ளேயே போட்டி பொறாமையோடு இயங்கி வரும் ஸ்தாபனம் அல்ல; மாறாக உறுப்பு நாடுகளின் நலன் காத்து அவற்றை அரவணைத்துச் செல்லும் அமைப்பாகும் என பிரதமர் சொன்னார்.
இந்த 2025-ல் ஆசியான் அமைப்புக்கு மலேசியா தலைமையேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்து, டாவோசில் 2025 உலகப் பொருளாதார ஆய்வரங்கை ஒட்டி நடைபெற்ற நிகழ்வில் முக்கிய உரையாற்றிய போது டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.