
கோலாலம்பூர், மார்ச்-12 – தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சை பிரதமர் துறையின் கீழ் கொண்டுவருமாறு மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இன மற்றும் மத நல்லிணக்கத்தை வளர்ப்பதில் வலுவான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தவும் ஆக்கப்பூர்வமான கொள்கை வகுக்கப்படுவதையும் உறுதிச் செய்ய அது அவசியமாகும்.
தேசிய ஒற்றுமை என்பது பத்தோடு பதினொன்றான அரசாங்க இலாகா அல்ல – மாறாக மலேசியாவின் நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்தின் முதுகெலும்பாகும் என, MIPP கட்சித் தலைவர் எஸ்.பி. புனிதன் கூறினார்.
இன அல்லது மத பதற்றங்கள் ஏற்படும் போது, அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் உடனடி கவனம் தேவை.
அரசு நிர்வாகத்தின் தலைவராக உள்ள பிரதமர், விரைவான நடவடிக்கை மற்றும் தெளிவான கொள்கை திசையை உறுதிச் செய்வதற்கான ஒற்றுமை முயற்சிகளில் நேரடியாக ஈடுபட வேண்டும்.
ஒருமைப்பாட்டுக்கான முயற்சிகள் என்பது வெறுமனே கலாச்சார நிகழ்வுகளை உட்படுத்தவில்லை; அதையும் தாண்டியது என MIPP நம்புகிறது.
எனவே, ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்து இனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வளர்க்கும் உறுதியான கொள்கைகள் நமக்குத் தேவை.
பிரதமரின் நேரடி மேற்பார்வையின் மூலம், இம்முயற்சிகள், தகுதியான கவனத்தையும் வளங்களையும் பெற முடியும்.
எனவே, நாட்டின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் நல்லிணக்கத்திற்காக இப்பரிந்துரையை அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என MIPP வலியுறுத்துகிறது.
தேசிய ஒற்றுமை என்பது வெறும் அரசியல் பிரச்சினை அல்ல – அது ஒரு நாட்டின் அத்தியாவசியமாகும் என புனிதன் நினைவுறுத்தினார்.